Friday, September 28, 2018

பரியேறும் பெருமாள்கள் சார்பாக ஸ்பெஷல் முத்தங்கள் மாரி - `பரியேறும் பெருமாள்' விமர்சனம்

பரியேறும் பெருமாள்கள் சார்பாக ஸ்பெஷல் முத்தங்கள் மாரி - `பரியேறும் பெருமாள்' விமர்சனம்

கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.'


வழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.


ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்கவே முடியாது. `இதுதான் கதை' என்ற முன்முடிவுகள் எதுவுமில்லாமல் போய் உட்காருங்கள். நாக்கில் எச்சில் ஊற முதல் காட்சியில் மோப்பம் பிடித்து அலையும் கறுப்பி முதல், இறுதிக் குறியீடாக ஓங்கி நிற்கும் இரண்டு டீ க்ளாஸ்கள் வரை எல்லாமும்... எல்லாரும் உங்களிடம் வலி பகிர்வார்கள், கதை சொல்வார்கள், கதறி அழுவார்கள், சுற்றி நின்று நடனமாடுவார்கள்... கடைசியாகக் குத்திக் கிழிக்கும்படி கேள்வியும் கேட்பார்கள்.


பரியனாகக் கதிர். அவரை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும்போதும் தோன்றும் கேள்வி ஒன்றுதான். `இவ்வளவு திறமை இருந்தும் இவர் ஏன் நிறைய படங்கள் பண்றதில்ல?' பரியேறும் பெருமாளில் கறுப்பியுடனான முதல் காட்சியிலேயே இந்தக் கேள்வியை மீண்டும் உரக்கக் கேட்க வைக்கிறார். டைட்டில் ரோலை ஏற்று நடிப்பது சாதாரணமல்ல. அதுவும் அடர்த்தியான கதை கொண்ட படத்தில் அப்படி நடிப்பது மிகப்பெரிய சவால். மொத்தமாகத் தூக்கி சுமக்கின்றன அவரின் தோள்கள். பரியன்தான் இந்தப் படத்தின் ஆன்மா.


'யப்பா... எவ்ளோ கதை இருக்கு உன்கிட்ட? எனக்கெல்லாம் சொல்ல ஒண்ணுமே இல்ல' - இதுதான் ஆனந்தி. கிராமத்துத் தெருக்களில் இறங்கி நடக்கும்போது எதிர்ப்படும் முதல் முகம். `இந்த உலகத்துல இருக்குற நல்லவங்க எல்லாம் என்னைச் சுத்திதான் இருக்காங்க' என நம்பும் வெகுளிப் பாத்திரத்துக்கு இயல்பாகவே பொருந்திப்போகிறார். நடுவே சில காலம் கமர்ஷியல் சினிமா பக்கம் ஒதுங்கியவரை இழுத்துவந்து `இதுதான் உங்களுக்கான இடம்' என நிறுத்தியிருக்கிறார் மாரி.




பரியேறும் பெருமாளைப் பல்லக்கில் வைத்துத் தாங்குகின்றன நான்கு கேரக்டர்கள். முதலாவது ஆர்.கே ராஜா. `நீ படிச்சு மேல வந்துடுய்யா! அதுவரைக்கும் அத்தனை அடியையும் இந்த உடம்பு தாங்கும்' என அவர் சொல்லுமிடத்தில் நமக்குக் கண்களில் முட்டி நிற்கிறது நீர். இரண்டாவது கராத்தே வெங்கடேசன். `குலசாமிக்குப் பண்றமாதிரி நினைச்சுக்கிட்டு இதைப் பண்ணிட்டு இருக்கேன்' எனத் தன் செய்கைகளை அவர் நியாயப்படுத்தும்போது, பாகுபாடில்லாமல் எல்லாருக்குமே ஆத்திரம் பொங்குகிறது.


மூன்றாவது மாரிமுத்து. இடைநிலை சாதியில் கிடந்து அல்லல்படும் சராசரி தகப்பன். `என் மகளையும் சேர்த்துக் கொன்னுடுவாங்கப்பா' என அவர் உடையுமிடத்தில் சாதிப் பெருமையில் ஆர்வமில்லாத, அதேசமயம் சுற்றியிருப்பவர்களின் பேச்சை நிராகரிக்க முடியாத ஒரு ஊஞ்சாலட்டத்தைக் கண்முன் நிறுத்துகிறார் இயக்குநர். நான்காவதும் மிக முக்கியமானதுமான கேரக்டர், கதிரின் அப்பாவாக வரும் தங்கராஜ். பரியனின் பாஷையில் - அம்மா சத்தியமாகச் சொல்லலாம், இப்படி ஒரு பாத்திரப் படைப்பு இதற்கு முன் தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததே இல்லை. ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போது நெஞ்சு ஏகத்துக்கும் கனத்துப்போகிறது. இதற்காகவே ஸ்பெஷல் முத்தங்கள் மாரி!


இறுக்கமான கதை நம்மை அழுத்தும்போதெல்லாம் இடையே நுழைந்து நெகிழச் செய்து சிரிப்பு மூட்டுகிறார், யோகிபாபு. வழக்கமான உருவகேலிகள் இதிலில்லை. தனக்கு சீரியஸாக நடிக்கவும் தெரியும் என இரண்டாம் பாதி முழுக்க நிரூபித்திருக்கிறார். நம் எல்லாருக்குமே இப்படி ஒரு நண்பன் இருந்திருப்பான். லிஜீஷ், ஒரே ஒரு காட்சியில் வரும் சண்முகராஜன், `மெட்ராஸ்' ஜானி என எல்லோருமே பக்கா பொருத்தம்.




படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் ஒரு குறியீடுதான். ஆர்.கே.ராஜாவின் கேரக்டர் அவமானங்களால் தோல் மரத்துப்போன அடிமைத்தனத்தின் குறியீடு. கராத்தே வெங்கடேசன் சாதியத்தைத் தாங்கிப் பிடிக்கும் பழைமைவாதத்தின் குறியீடு. சட்டக்கல்லூரி முதல்வர், ஒடுக்கப்பட்டவர்களைக் கல்வி மீட்டெடுக்கும் என்பதற்கான குறியீடு. ஓடியாடி அலைந்து தலை சிதறி மரித்துப்போகும் கறுப்பி காலங்காலமாக நிலவிவரும் சாதியச் செருக்கின் குறியீடு.


கதையாக மட்டுமல்லாமல், காட்சிகளாகவும் கனமேற்றுகிறார் மாரி செல்வராஜ். பரியனும் நண்பர்களும் குளித்துவிட்டு வரும் குட்டையில் சிலர் சிறுநீர் கழிப்பது, `நீ அப்பனான்னு பார்ப்போம்' என வக்கிரத்தை வலிமை இல்லாதவரிடம் காட்டுவது, `கோட்டால வந்தா, கோழிமுட்டைதான் போடணும்' என ஆங்கிலத்தை அளவீடாக வைத்து அவமானப்படுத்துவது... `இதென்ன உங்கப்பனுக்குப் புதுசா?' எனக் கண்ணீரோடு சமாதானப்படுத்துவது, யப்பா... எப்படித் தாங்குவது இத்தனை கனத்தை?


இசையை புளியங்குளத்தின் செம்மண்ணிலிருந்து வெட்டியெடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஓர் இளம் தலைமுறை இசையமைப்பாளர் இப்படியான முயற்சிகளுக்கு உடன் நிற்பது படத்துக்குப் பெரிய பலம் சேர்க்கிறது. நிறைய பரீட்சார்த்த முயற்சிகள். அவை எல்லாமே படத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியிருக்கின்றன. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, பாலை நிலத்துப் புழுதியையும் பாறைகள் உமிழும் வெப்பத்தையும் அப்படியே கடத்தியிருக்கிறது. பாயின்ட் ஆஃப் வியூ, டாப் வியூ என ஒவ்வொரு கோணமும் காட்சிவழி கதை சொல்கிறது.




ஆலமரமாய் பரியன் நிற்க, அவனிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு கதை சொல்கிறது. அதை அத்தனையையும் எடுத்துக் கோத்த விதத்தில் ஒளிர்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா. சண்டைக்காட்சிகள் வடிவமைத்த மாதிரியெல்லாம் இல்லை. ஒவ்வோர் அடியுமே நிஜம். தத்ரூபம். `ஸ்டன்னர்' சாமிக்கு இது மிக முக்கியமான படம். திரைக்கதையில் தேவையற்ற காட்சியென்றோ, வசனமென்றோ சொல்ல ஒன்றுகூட இல்லை. படத்தில் நடக்கும் ஒவ்வோர் அசைவுக்குப் பின்னும் ஒரு காரணமிருக்கிறது, அது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.


பெயர், ஊருக்கு அடுத்தபடியாக `என்ன சாமி கும்பிடுறீக' என்ற கேள்வியைச் சந்தித்திருக்கிறீர்களா, அதன் பதில் எதிராளியின் முகத்தில் தரும் ஏளனச் சிரிப்பால் கூனிக் குறுகியிருக்கிறீர்களா, பிறப்பால் மட்டுமல்ல... நிறத்தால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை அனுபவத்திருக்கிறீர்களா, கிழிந்த சதைகளிலிருந்து வெளியேறத் துடிக்கும் ரத்த வெடிப்பில் சிறுநீரின் உவர்ப்பு பட்டு துடித்திருக்கிறீர்களா, முகத்தை மூக்கால் உரசிக் கொஞ்சும் செல்ல நாயை ஆறறிவு(?) மனித மிருகங்களுக்குக் காவு கொடுத்திருக்கிறீர்களா, மிரட்சி ஏற்படுத்தும் இருள் வெளிகளில் சிறு வெளிச்சக் கீற்றாய் தென்படும் தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா, இதில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்திருந்தால், நீங்களும்தான் இந்தப் `பரியேறும் பெருமாள்.' இன்னும் உறுதியாக எழுந்து நில்லுங்கள். உங்களுக்கான விடியல் வரும். இது எதுவும் நிகழாத ஆனந்தியின் வாழ்க்கை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா, உங்கள் அருகில்... உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு `பரியேறும் பெருமாள்' இருப்பான். அவனை இறுக்க அணைத்துக்கொள்ளுங்கள். தோளோடு தோள் நில்லுங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது. அந்த அணைப்பு எல்லா வித்தியாசங்களையும் அகற்றட்டும்.


மாரி செல்வராஜ் மட்டுமல்ல... தமிழ் சினிமாவே மார்தட்டி சொல்லிக்கொள்ளும்படியான படைப்பு, இந்தப் `பரியேறும் பெருமாள்'.


Tuesday, August 7, 2018

இதோ இறந்த பின்பும் "இட" ஒதுக்கீடுக்காக போராடுகிறார் கருணாநிதி!



சென்னை: வாழ்க்கை முழுக்க போராடிய திமுக தலைவர் கருணாநிதி, இறந்த பின்பும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரை மெரினாவில் அடக்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது.



Saturday, August 4, 2018

வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தி .

🌻🌻🌻🌻🌻🌻*ஜெர்மனியில் ஆசிரியர்களுக்குத் தான் எல்லோரையும் விட அதிக சம்பளமாம்.*

*நீதிபதிகள்,  "நாங்கள் தான் நீதி வழங்கும் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம்,"*

*எனவே எங்களுக்குதான் சம்பளம் அதிகம் வேண்டும்*

என்று சொன்னதை கேட்டு *ஜெர்மன் அதிபர் சொன்ன பதில்*

*"உங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்களை*
*(ஆசிரியர்கள் ) விட நீங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்*

நம்ம நாட்டு தலைவர்களுக்கு மண்டையில் உரைக்குமா?🌻🌻🌻🌻🌻🌻